இந்தியாவைப் போலவே சீனாவுக்கு சமவாய்ப்பு - ரணிலின் தந்திரம்
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஐந்தாவது தடவையாக நடைபெறும் சீனாவின் மிகப்பெரிய சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் நேற்று காணொளி வாயிலாக கலந்து கொண்ட போதே அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல அரச தலைவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டுள்ளனர்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீன சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு சர்வதேச இறக்குமதி கண்காட்சி ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முதலாவது மன்றத்தில் சர்வதேச இறக்குமதி கண்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டதென அவர் நினைவூட்டியுள்ளார்.
சர்வதேச இறக்குமதி கண்காட்சி
அன்று தொடக்கம் வர்த்தக தாராளமயமாக்கலில் சர்வதேச இறக்குமதி கண்காட்சி ஒரு முக்கியமான அம்சமாக விளங்குவதுடன், உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிறுவங்களை வலுப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக இயங்கி வருகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் இலங்கை பங்குகொள்வது பாரிய சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் சீனாவின் சந்தையில் இலங்கை கால் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனா தனது பரந்த சந்தையில் உள்ள வாய்ப்புகளை ஏனையோருடன் பகிர்ந்து கொள்வதற்காக அனைத்து நாடுகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயல்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
வலுவான உள்நாட்டுச் சந்தையை வளர்ப்பதற்கும் சேவைகளில் வர்த்தகத்திற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கும் தாம் முயற்சிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான உறவு
வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான எமது உறவை, தீர்மானிக்கிறது என அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய வர்த்தக சமூகம் கொழும்பில் நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒருங்கிணைப்பை எட்டுவது முக்கியமானது. வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை, தீர்மானிக்கிறது.
வர்த்தக ஒருங்கிணைப்பு பொருளாதார அடிப்படையை வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் சிறந்த அரசியல் உறவுக்கு பொதுவான பொருளாதார அடித்தளம் அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.