சர்வதேச நாணய நிதியத்தின் பரிசீலனை - இலங்கையின் கடன் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சீனாவின் உத்தரவாதம் இல்லாமல், இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ப்ளூம்பெர்க் தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கடனை நீடிக்க தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கடனை நீடிக்கும் சீனா
இதேவேளை இலங்கையுடன் ஒரு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனை அகற்றும் திட்டம் குறித்து நட்புரீதியில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உதவி
மேலும் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை ஆதரிக்கும் கடிதத்தை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த காலகட்டத்தில், இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் இது குறுகிய கால கடன் அழுத்தத்தை குறைக்க இலங்கைக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
