ஜனாதிபதி தேர்தலில் அநுரவை ஆதரித்த ரணிலும் அதற்காக அவர் கொடுக்கும் விலையும்
ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.
அதேநேரத்தில், 1993 மாகாணசபைத் தேர்தலில் கம்பகாவில் உள்ள பியகமவில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க கொழும்பிலிருந்து போட்டியிடுவதற்கு தனது பார்வையை திருப்பினார்.
கூரேயின் பின்புல ஆதரவுடன், கொழும்பு மத்திய தொகுதியை, ரணில் கட்சித் தலைவர் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவிடம் கேட்டார்.
கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து ஹேமாவின் பெயரை நீக்க ரணிலும் கூரேயும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர்.கொழும்பு மாநகரசபை வேட்புமனு மண்டபத்திற்கு வந்தபோது தான், ஹேமா தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.
பிரேமதாசவின் எதிர்ப்பாளராக அறியப்பட்டாலும், ஹேமாவின் இந்த நிலை குறித்து காமினி திசாநாயக்க கவலைப்பட்டார். 1994 இல் அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஆனபோது, காமினி திசாநாயக்க, சஜித் பிரேமதாசவை அரசியலுக்கு அழைத்தார்.
அவருக்கு கொழும்பு மத்திய தொகுதியை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் காமினியின் படுகொலை எல்லாவற்றையும் மாற்றியது. ரணில் கட்சித் தலைவராக உயர்ந்து, நீ அரசியல் செய்ய விரும்பினால், அம்பாந்தோட்டைக்குச் செல் என்று சஜித்திடம் வெளிப்படையாகக் கூறினார்.
மத்திய கொழும்பு தனக்கு ஒருபோதும் வழங்கப்படாது என்பதை உணர்ந்த சஜித், எந்தத் தொகுதியையும் ஏற்றுக்கொண்டு,அம்பாந்தோட்டையில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். சஜித்தின் வருகை ராஜபக்ச குடும்பத்தை அமைதியற்ற நிலைக்குள்ளாக்கியது.
தங்கள் களத்தைப் பாதுகாக்க, ரணில் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா மற்றும் ஆனந்த குலரத்னவைப் பயன்படுத்தி, சஜித்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார்.
இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் அம்பாந்தோட்டையில் சஜித் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். இது ராஜபக்சக்களை மேலும் கோபப்படுத்தியது.
ரணில் பிரதமரானபோது, சஜித் ஒரு சக்திவாய்ந்த அமைச்சைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால் ரணில் அவரை சுகாதார பிரதி அமைச்சராக ஒதுக்கித் தள்ளினார். இருப்பினும், கட்சிக்குள் தனக்கு நேரம் வரும் என்று நம்பி சஜித் பொறுமையாக இருந்தார்.
2010 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, சஜித்தை தலைவராக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், ஐ.தே.க.வின் மத்திய குழு உறுப்பினர்களை தனது பக்கம் சாய்த்து, கிளர்ச்சியை அடக்கினார் ரணில்.
2015 ஜனாதிபதி தேர்தலில் கரு ஜெயசூரிய அல்லது சஜித் போட்டியிட வேண்டும் என அழைப்புகள் அதிகரித்தபோது, தான் போட்டியிடாவிட்டால் எந்த ஐ.தே.க. உறுப்பினரும் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரணில் அறிவித்தார்.
கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரையும் தடுக்க ரணில், மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தினார்.
மைத்திரிபால பொதுவேட்பாளராக உருவெடுத்தபோது, சந்திரிகா, மங்கள மற்றும் ஏனைய சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற ரணிலின் கோரிக்கையை ஓரங்கட்டினர்.
பிரதமர் வேட்பாளர் எவருக்கும் உடன்பாடு இல்லை என்று மங்கள சமரவீர வெளிப்படையாகக் கூறிய நிலையில், ரணில் சஜித்தின் பக்கம் திரும்பினார். பிரசார மேடைகளில், ரணிலை பிரதமராக அறிவிக்காமல், ஐ.தே.க. மைத்திரிபாலவை ஆதரிக்காது என்று சஜித் அறிவித்தார்.
இது ரணிலை பிரதமராக ஒப்புக் கொள்ள சந்திரிகா, மங்கள மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை, கட்டாயப்படுத்தியது, இதனால், ரணில் காத்திருக்கும் பிரதமராக அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டார். மைத்திரிபாலவின் 2015 வெற்றிக்குப் பிறகு, ரணில் பிரதமரானார். ஆனால் விரைவில் அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
சஜித்தை ஐ.தே.க. தலைவராக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில், அறுபதுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில், மைத்திரிபால அவரைப் பிரதமர் பதவியை ஏற்க அழைத்தார். ஆயினும், வாய்ப்புகள் வந்தபோதும், தனது தலைவரை காட்டிக் கொடுக்க விருப்பமில்லாமல் சஜித் மறுத்து விட்டார்.
2018ஆம் ஆண்டில், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ரணிலுக்கு எதிரான ஐ.தே.க குழுவின் ஆசீர்வாதத்துடன் சஜித் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றும், மைத்திரிபால சிறிசேன கூறினார். அந்த நேரத்தில் சஜித் தனது தலைவரின் முதுகில் குத்த மறுத்துவிட்டார்.
ரணிலின் நெருங்கிய உதவியாளர் மங்கள கூட, 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு சஜித்தை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியபோது, சஜித்தின் அமைச்சின் கீழ் உள்ள மத்திய கலாசார நிதியத்தில் நடந்த நிதி முறைகேடுகளை விசாரிக்க ரணில் ஒரு குழுவை நியமித்தார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை தோற்கடிக்க ரணில், மகிந்தவுடன் இணைந்து பணியாற்றினார் என்பதையும், கோட்டாபயவின் குடியுரிமையை நிரூபிக்க தடையாக இருந்த, குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தின் கோப்புகளை அவர் மறைத்தார் என்பதையும் அறியாதவர்கள் யாரும் இல்லை.
சஜித் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து ரணில் பிரதமர் பதவியை இழந்தபோது, சஜித்துக்கு எதிரான மத்திய கலாசார நிதியத்தின் குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்புகள் அலரி மாளிகையில் ஒரு அலமாரியில் விடப்பட்டதாக ரணிலின் மாமாவின் சண்டே ரைம்ஸ், செய்தி வெளியிட்டது.
சஜித்தின் முறைகேடுகள் குறித்த இந்தக் கோப்பை மகிந்த லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தார். அதை ஒப்படைத்த பின்னர், 2020 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து வீட்டில் இருந்த ரணிலை தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் வருமாறு அழைத்தார்.
ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்கி சஜித்தை முடிப்பதே மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் உத்தியாக இருந்தது. ‘அரகலய’வின் மத்தியில், கோட்டா பிரதமர் பதவியை சஜித்திடம் ஒப்படைக்கவிருந்த போது, மகிந்தவும் ராஜபக்ச குடும்பத்தினரும் அதை எதிர்த்தனர்.
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு சஜித் நிபந்தனைகளை முன்வைத்தார், ரணில் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்காமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு ராஜபக்சக்களுடன் உடன்பாடு செய்து கொண்டார்.
ரணில் ஜனாதிபதியான பிறகு, எதிர்க்கட்சியில் இருந்த அனுரகுமாரவை, சஜித்தை தாக்க தூண்டினார். சஜித் மற்றும் அனுர விவாதம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்தது. அந்த நேரத்தில், அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்த விவாதத்தை ஒளிபரப்ப விருப்பம் தெரிவித்தன. ஆனால் இருவரும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
தனது கட்டுப்பாட்டில் இருந்த சுயாதீன தொலைக்காட்சிக்கு சஜித் வரமாட்டார் என்பதை அறிந்த ரணில், அனுரவை அழைத்து வந்து விவாதத்தை ஒளிபரப்பி, சஜித்தை முடிக்குமாறு அறிவுறுத்தினார். மத்திய கலாசார நிதியத்தின் சஜித் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக ஒரு செய்தியையும் அவர் விதைத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி, சஜித்தை கைவிட்டு ரணிலுடன் சேரும் என்ற செய்தி நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் ஒரு மந்திரமாக உச்சரிக்கப்பட்டது, இது அனுரவுக்கு சாதகமாக அமைந்தது.
2025 ஜனாதிபதி தேர்தலில், ரணில் பெரும்பாலும் சஜித்துக்கு சாதகமான சிறுபான்மையினர் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் மலையக தோட்டப் பகுதிகளுக்குச் சென்றார். சஜித், அனுரவை தோற்கடிக்க முடியாது என்றும் அவர் பகிரங்கமாகக் கூறினார்.
அஞ்சல் வாக்கெடுப்புக்கு முன், அனுர சுயாதீன தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். தலதா அதுகோரள சஜித்தை கைவிட்டு ரணிலை ஆதரிக்க வந்தார், அனுர வெற்றி பெறுவார் என்று பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.
தலதாவின் கட்சி விலகலை அனுரவும் ஜே.வி.பி.யும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு, தலதாவுக்குப் பதிலாக கீதா தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினர்.
சஜித்தின் சிறுபான்மை வாக்குகளை ரணில் உடைக்கவில்லை என்றால், இன்று சஜித் ஜனாதிபதியாக இருந்திருப்பார். சஜித் தோற்கடிக்கப்பட்ட பிறகு, சஜித்தை முடித்து எதிர்க்கட்சித் தலைவராக அனுர நியமிப்பார் என்று ரணில் நினைத்தார்.
இருப்பினும், 1988-89 பயங்கரவாதத்தில், ஜே.ஆர். மற்றும் பிரேமதாச அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இறந்து விட்ட அல்லது நோய்வாய்ப்பட்டிருந்த சூழலில், அரசியலில் பயங்கரவாதத்தின் ஒரே அடையாளமாக ரணிலைக் கண்டது ஜே.வி.பி.
பயங்கரவாதத்தின் போது பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, கொலை செய்யப்பட்ட ஜே.வி.பி. இளைஞர்களுக்காக ரணிலைத் தண்டிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கூறியது.
அதன் பின்னர், அனுரவின் அரசாங்கம் ரணிலைத் துரத்தத் தொடங்கியது. இதன் விளைவு தான் ரணிலின் சிறைத்தண்டனை. ரணில் ஐ.தே.க.வின் தலைவராக இருந்தபோது, எஸ்.பி.திசாநாயக்க ரணிலைப் பாதுகாக்க வந்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றார்.
எஸ்.பி.திசாநாயக்கவைக் காப்பாற்ற அவரது கிராமமான ஹங்குரன்கெத்தவிலிருந்து கொழும்புக்கு ஒரு பேரணியை கட்சி ஏற்பாடு செய்தது. நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை வாழ்க்கைச் செலவுதான், எஸ்.பி.திசாநாயக்க அல்ல என்று கூறி, ரணில் அந்தப் பேரணியை பாதியிலேயே நிறுத்தினார்.
சரத் பொன்சேகா, ரணிலைப் பாதுகாக்க வந்து சிறைக்குச் சென்றபோது, பொன்சேகாவின் சார்பாக நடத்தப்பட்ட எந்தப் போராட்டத்திலும் ரணில் பங்கேற்கவில்லை.பொன்சேகா உதவியற்றவராக இருந்தார்.
‘ரணில் என்னைத் தோற்கடித்தார். ரணில் அனுரவைத் தோற்கடித்தார். ரணிலுக்காக நாம் ஏன் எங்கள் கழுத்தைக் கொடுக்க வேண்டும்? என்று, ரணில் சிறைக்குச் சென்றபோது, சஜித் சொல்லியிருக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை.
சஜித்தும் ஐக்கிய மக்கள் சக்தியும் ரணிலுக்காகப் போராடமாட்டார்கள் என்று அரசாங்கம் நினைத்தது. சஜித் இந்த விளையாட்டில் இணைந்த பிறகுதான், அரசாங்கம் அமைதியற்ற நிலைக்குள் தள்ளப்பட்டது.
தனது நண்பர் என்று அழைத்த அனுரவின் அரசாங்கம், அவரை சிறையில் அடைத்து, நிர்க்கதியான நிலைக்குள் தள்ளிய போது, ரணில் எப்போதும் தனது எதிரி என்று நினைத்த- எப்போதும் எதிரி என்று சொன்ன சஜித், ரணிலைப் பார்க்க வந்தபோது ரணில் என்ன நினைத்திருப்பார்?
ரணிலுக்கு முன் சிறிலங்காவில் சிறைக்குச் சென்ற அரச தலைவர் சிறி விக்கிரம ராஜசிங்கன் என்ற ஒரு கருத்து அண்மைய நாட்களில் முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன் வெள்ளையர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது சிங்கள உயரடுக்கின் உதவியுடன் நடந்தது. மன்னருக்கு அவர்களுடன் மோதல்கள் இருந்ததால், அவர்கள் மன்னரை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்தனர்.
ரணிலுக்கு சஜித்துடன் மட்டுமல்ல, எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் மோதல் இருந்தது. ஆனால் சஜித், ரணிலுக்கு துரோகம் செய்யவில்லை.
ஆங்கில மூலம் -உபுல் ஜோசப் பெர்னாண்டோ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
