சிறிலங்காவில் அமையவுள்ளதா சீனாவின் ராடர் தளம் - உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!
சிறிலங்காவில் சீனாவின் ராடர் தளம் ஒன்று அமையவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அது தொடர்பில் சீனவுடன் தாம் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தெவிநுவர தெற்கு நகரத்தில் ராடர் அமைப்பை நிறுவுவதற்கு சீனாவுடன் எந்தவோர் உடன்பாடும் இல்லையென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உண்மைக்கு புறம்பானது
சீனாவின் ராடர் தளம் சிறிலங்காவின் மாத்தறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ராடர் தளத்தை சீனா, சிறிலங்காவில் அமைப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வல்லரசுகளை உளவு பார்க்கும் வசதி
அது மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கும் குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
