இலங்கை வரும் கப்பலால் முற்றுகிறது முறுகல் - இந்தியாவுக்கு சீனா பதிலடி
சீனாவின் பதிலடி
சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
இதன்படி தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என தாம் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த ஆய்வுக் கப்பலான Yuan Wang 5எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் கவலை
இந்தநிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருவதாக நேற்றையதினம் தெரிவித்திருந்தார். அத்துடன் புதுடெல்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
தலையிடுவதை தவிர்க்க வேண்டும்
இந்தநிலையில் ரொய்ட்டர்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகம், பீஜிங் எப்போதும் ஆழ்கடலின் சுதந்திரத்தை சட்டபூர்வமாகப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்து, தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.