சீனாவின் கைகளுக்குச் சென்ற இலங்கை பகுதி! இந்தியாவுக்கு பெரும் சிக்கல்
இலங்கைக்கு வரும் சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பல் தொடர்பில் இந்திய தரப்பின் கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சைனாஸ் யுவான்வாங் - 5 என்ற இந்தக் கப்பல் ஓகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது
இந்தக் கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று இந்திய ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன.
இந்த நிலையில் குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கையில் தரிக்கவுள்ள சீன ஆய்வு கப்பல்
பின்னர் சீனாவிற்கான கடனை திருப்பிச் செலுத்த முடியாமையால், 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சைனாஸ் யுவான்வாங் - 5 விண்வெளி கண்காணிப்பு கப்பல் விண்வெளி - தரை தகவல் பரிமாற்றத்தை செயற்படுத்தி வருகிறது.
அத்துடன் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் மற்றும் அணுகலுக்கு முக்கியமான தகவல் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.