பருத்தித்தீவில் சீனர்கள் இரகசிய நுழைவு - பின்னணியில் யாழ்.மாவட்ட பிரமுகர்
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை, பிரதேசசபைத் தவிசாளர் ஒருவரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளவரே அழைத்துச் சென்றுள்ளதாக தீவகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்கு கடந்த 16ஆம் திகதி மாலை ‘கப்' ரக வாகனத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் வந்துள்ளனர். அவர்களை, ஆளும் கட்சியின் யாழ். மாவட்ட பிரமுகர் ஒருவரே கொண்டு வந்து இறக்கியுள்ளார்.
இரகசிய உளவு
இறங்குதுறையிலிருந்து தனிப் படகில் அவர்களை, கொலைச் சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் முதலில் அனலை தீவில் சென்று இறங்கியுள்ளனர்.
அங்கு உந்துருளியில் (மோட்டார் சைக்கிளில்) ஊரைப் பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து சென்று பருத்தித்தீவில் இறங்கியுள்ளனர்.
சீனப் பிரஜைகள் படகில் எழுவைதீவுக்கு வடக்கே 9 கடல் மைல் தொலைவில் சுற்றித்திரிந்ததையும் மீனவர்கள் கண்டுள்ளனர்.
பருத்தித்தீவில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் நேற்றுமுன் தினம் இரவு தனிப் படகு மூலமாக இரகசியமாக அழைத்து வரப்பட்டு அவர்கள் கொழும்பு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.