சிறிலங்காவிற்கு திருப்பியடித்த சீனா - முக்கிய பதிலுக்காக காத்திருக்கும் ஐ.எம்.எஃப்!
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பந்து சிறிலங்காவிடமே இருக்கின்றது என்று சீனா கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிடம் பெற்ற கடன்களை மறுசீரமைக்க கோரிய சிறிலங்காவிற்கு, சீனா இவ்வாறு பதில் வழங்கியுள்ளது. ஆகவே சீனாவின் பதில் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்காவின் பதில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவ்வாறான நிலையில், சிறிலங்கா, சீனாவிடம் பெற்ற கடன் தொடர்பில் சீனா வியத்தகு முடிவை எடுக்க வேண்டும் என்று அண்மையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினை
இதேவேளை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள சீன தூதரக பேச்சாளர் ஒருவர், சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னரே சிறிலங்கா நிதியமைச்சகத்திடம் சீனா தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க, தமது வங்கிகளை ஊக்குவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் அப்போதைய சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் சீன நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும் எனில், சீனாவிடம் பெற்ற கடன்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சீன பிரதமர் மற்றும் மகிந்த இடையே உரையாடல்
சீனாவிடம் பெற்ற கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதிலளித்திருந்த சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட பின்னர், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து சிறிலங்கா நிதி அமைச்சுக்கும் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிலங்காவின் நிதியமைச்சிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே பந்து சிறிலங்காவிடமே தற்போது உள்ளது என்று சீன தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கு அதிக கடன் வழங்கிய நாடுகள்
சிறிலங்காவின் மொத்த இருதரப்புக் கடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 6.2 பில்லியன் டொலர்களாக சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் சீனா ஆகியன சிறிலங்காவிற்கு அதிக கடன்களை வழங்கியுள்ளன.
சிறிலங்காவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு கடன் மற்றும் பரிமாற்றங்கள் மூலம். சிறிலங்காவில் 14 பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மை பத்திரக் கடனுக்கும் உள்ளாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
You may like this