சிறிலங்காவை மையப்படுத்தி ஜப்பானின் இராஜதந்திர காய் நகர்த்தல்கள் - கைகோர்க்குமா சீனா!
சிறிலங்காவை கடன் நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் நோக்கில் கடன் வழங்குநர்களுக்கிடையிலான கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் சீனாவின் பங்கேற்பு குறித்து உறுதிப்படுத்தப்படவில்லையென சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதன் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்த ஜப்பான்
இந்த நிலையில், சிறிலங்கா எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படும் பொறுப்பை ஏற்க ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் அதில் சிறிலங்காவின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளதுடன், இதன் மதிப்பு 3.5 பில்லியன் டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானிடம் கோரிக்கை விடுக்கும் சிறிலங்கா
அத்துடன், சிறிலங்காவின் நிதி பற்றிய தெளிவின்மை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் சிறிலங்காவின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை, சிறிலங்கா கோரும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஜப்பானிய தரப்புக்களின் இந்த முயற்சி தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.