விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர் லக்ஸ்மன் கதிர்காமரே!
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக ஆக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர் என சிறிலங்காவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று நிராயுதபாணியாக மாறுவதற்கு லக்ஸ்மன் கதிர்காமரின் அன்றைய செயற்பாடுகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் நிதி வசூலிக்கின்ற நிலையையும் லக்ஸ்மன் கதிர்காமர் இல்லாது ஒழித்திருந்தார் எனவும் சிறிலங்கா நாடாளுமன்றில் வைத்து பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் சீரான நட்புறவு
இவை அனைத்தும் நட்பு நாடுகளின் உறவுகளைப் பேணியதாலேயே சாத்தியமானதாகவும், எனவே சர்வதேச நாடுகளுடன் பகைத்துக்கொள்ளாமல் தொடர்ந்தும் நட்புறவுடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, லக்ஸ்மன் கதிர்காமர், அவரது காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான பாரிய செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும், அவை அனைத்திற்கும் அவரே தலைமை வகித்து செயற்பட்டமையாலுமே, கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரும் உதவியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பிற்கு துணையாக இருந்த சீனா
இதேவேளை, சீனா இலங்கையின் முக்கியமான நண்பன் என்றும், சர்வதேச அரங்கில் இலங்கையின் பாதுகாப்பிற்காக முன்னிற்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, சீனா எமக்கு மிகவும் முக்கியமானது, அவர்கள் எமது வரலாற்று நண்பர், எமது பாதுகாப்பிற்காக சர்வதேச சமூகத்தில் நமக்காக நின்றார்கள். யுத்தத்தின் இறுதியில் ஆயுதங்களை வழங்கி, மீண்டும் ஒரு பெரும் பயங்கரவாதி உருவாகுவதை தவிர்க்க வழிவகுத்தனர்.
நாம் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் சிறிலங்கா நாடாளுமன்றில் வீரபிரதாப பேச்சுக்களை வாரி இறைத்துள்ளார்.