சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவத் தயார் - சீனா அதிரடி அறிவிப்பு
இலங்கை எதிர்நோக்கியுள்ள நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளை அளிக்கத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வாங் யீ, புதன்கிழமை(16) மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில் சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் நம்பிக்கையான மூலோபாய பங்காளி

சீனா எப்போதும் இலங்கையின் நம்பிக்கையான மூலோபாய பங்காளியாக இருப்பதுடன், இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்பாகவே இருந்து வருவதோடு, அதன் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்பதையும் அவர் பாராட்டினார்.
இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தை பாதுகாப்பதில் சீனா உறுதியான ஆதரவை அளிக்கின்றது. மேலும் இலங்கையுடன் பல்வேறு துறைகளில் ஆளுகை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக உள்ளது என்றார்.
இலங்கையின் சுயாதீன அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், "வறுமை" மற்றும் "வளர்ச்சியற்ற தன்மையை" அகற்றவும், அதன் தொழில்மயமாக்கல் செயல்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை துரிதப்படுத்தவும் சீனா உதவும் என்று வாங் உறுதியளித்தார்.
இலங்கை தனது தற்காலிக நெருக்கடிகளை கடந்து, அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப அபிவிருத்திப் பாதையைக் கண்டறிந்து, புத்துயிர் மற்றும் செழிப்பை அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா-தெற்காசிய கண்காட்சியில் இலங்கை ஒரு முக்கியமான பங்கேற்பாளர் மற்றும் பயனாளி என்று குறிப்பிட்ட அவர், சீன சந்தையை மேலும் ஆராய்வதற்காக இந்த முக்கியமான தளத்தை தொடர்ந்து நன்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை தரப்பை கேட்டுக் கொண்டார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம்

இதேவேளை இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும், கடினமான காலங்களில் இலங்கைக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிக்காகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு தனது நன்றியை தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற இரு தரப்புக்கும் இடையிலான முன்னோக்கிய முதன்மையான ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கை மக்களுக்கு நன்மைகளை கொண்டு வருவதுடன் பிராந்திய இணைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கும் என்றார்.
பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இலங்கை, சீனாவுடன் இணைந்து உணவு தன்னிறைவை அடைவதற்கும் முக்கிய கைத்தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.