ஷி யான் 6 ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இழுபறி
சிறிலங்கா கடற்பரப்பில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6இன் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி இதுவரை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை மீறி சிறிலங்காவின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பலுடன் இணைந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் வெளிவிவகார அமைச்சு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6இல் நேற்றைய தினம்(27) தெளிவூட்டல் அமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
ஷி யான் 6
இந்த அமர்வில் சிறிலங்கா தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனம், வளிமண்டளவியல் திணைக்களம், சமுத்திரம் பல்கலைக்கழகம் மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது, கப்பலின் ஆராய்ச்சி திறன்கள் மற்றும் அதன் வசதிகள் தொடர்பில் கப்பலில் பயணம் செய்த தரப்பினர் அமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவது மற்றும் அதன் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனுமதி மாத்திரம் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.