சூடுபிடிக்கும் சீன கப்பல் விவகாரம்..! வெளியான புதிய தகவல்
சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வு கப்பல் இன்று துறைமுகத்தை வந்தடையாது என்று ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் எந்த கப்பலும் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுவான் வாங் 5 ஜூலை 14 ஆம் திகதி அதன் சீனத் துறைமுகத்தை விட்டு ஹம்பாந்தோட்டையை நோக்கி புறப்பட்டது.
'யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான, இலங்கையின் அனுமதி கடந்த மாதம் 12 ஆம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு, வெளிவிவகார அமைச்சால் வழங்கப்பட்டது.
11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை முறைமுகத்தில் தரித்திருப்பதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.
கடும் அதிருப்தியில் இந்தியா
எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.
இருப்பினும், சீன தரப்பில் இருந்து குறித்த கோரிக்கைக்கான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர, மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை நிலவரம்
இன்று மாலை நிலவரப்படி, இலங்கைக் கடலில் ஹம்பாந்தோட்டை தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளதாகவும் கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.