கரடியின் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் படுகாயம்
கரடியின் தாக்குதலுக்கு உள்ளான சிவில் பாதுகாப்பு படைச் சிப்பாய் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (7ஆம் திகதி) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தந்திரிமலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்டுபொத சிவில் பாதுகாப்பு படை கண்காணிப்பு நிலையத்தில் கடமையாற்றும் குணயா சந்திரபால என்ற 45 வயதுடைய சிவில் பாதுகாப்பு சிப்பாய் ஒருவரே கரடியால் தாக்கப்பட்டார்.
காட்டுப் பகுதிக்கு சென்ற போதே
நேற்று முன்தினம் (7ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் தந்திரிமலை, கட்டுபொத கும்புரு யாயவை அண்மித்த காட்டுப் பகுதிக்கு சென்ற போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கரடி தாக்கியதில் சிவில் பாதுகாப்பு சிப்பாயின் முகத்திலும் உடலின் முன்புறத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
