கொழும்பில் பயிற்சி வகுப்பில் மோதல்! ஆறு சாதாரண தர மாணவர்கள் கைது
கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் மிரிஹான தலைமையக காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக நுகேகொடை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தகவல்களின்படி, மாணவி ஒருவருடனான காதல் தொடர்பு எனக் கூறப்படும் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றியதைத் தொடர்ந்து சந்தேகநபர்களான மாணவர்கள் மற்றைய மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையின் 119 அவசர அழைப்பு பிரிவின் ஊடாக மிரிஹான தலைமையக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை குழுவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |