அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் மீட்பு..!
கொலம்பியாவின் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் தொலைந்து போன 4 சிறுவர்கள், 40 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 1 ம் திகதி சிறிய ரக விமானம் ஒன்று, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டின் மேற்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் ரனோக் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்.
குழந்தைகளை மீட்க வேண்டும்
தேடுதலின் போது விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து வெகு தொலைவில் இராணுவத்தினர் கைக்குழந்தையின் பால் போத்தலையும், சிறிய அளவிலான கூடாரம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகள் உயிருடன் இருப்பதாக உடினடியாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்த மறு நொடி கொலம்பிய அதிபர், "என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு முயற்சி செய்தாவது அந்த குழந்தைகளை மீட்க வேண்டும்." என உத்தரவிட்டுள்ளார்.
பழங்குடி மக்களின் உதவி
அதிபரின் உத்தரவினை தொடர்ந்து சிறுவர்களை தேட இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது, குழந்தைகள் குறித்து அவர்களது பாட்டி சில பேசிய வார்த்தைகளை ஒலிப்பெருக்கியில் உலங்கு வானூர்தியில் மூலம் காடு முழுவதும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
தேடுதலின் போது குழந்தைகளின் தடம் அறியப்படாத நிலையில், உள்ளூர் பழங்குடி மக்களின் உதவியை தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் நாடியுள்ளனர்.
இந்நிலையில் பழங்குடியினரின் உதவியோடு 40 நாட்களின் பின்னர் 4 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
Surprise ?
— Dp Rathi (@rathi_dp) June 10, 2023
Four missing Children have been found alive 40 days after Amazon jungle plane crash.
What an example of survival❤️?#Colombia #Amazon #PlaneCrash #SaturdayMotivation pic.twitter.com/923DFCVCWc
இதனை கொலம்பியா அதிபர் பெட்ரோ தனது டுவிட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அமேசான் காட்டில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
