கனவுகள் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள முடியுமா? சாதனை படைத்த விஞ்ஞானிகள்
கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் ஆய்வு
இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது உறக்கத்தில் 'ரெம்' எனும் ஒரு கட்டம் காணப்படுகின்றது.
இந்த கட்டத்தில் நாம் காணும் கனவுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால் இதை தொடர்ந்து அடையாளம் காண முறையான பயிற்சி அவசியம்.
இதன் மூலம் நாம் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும், கனவில் நமக்கு தேவையான சில மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில், இந்த பயிற்சியை பெற்ற இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ரெமியோ மொழி
சோதனையில், முதலில் ஆண் நபர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் சில விநாடிகளில் 'ரெம்' நிலையை அடைந்துள்ளார்.
இதன்போது, அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க சில பிரத்யேக கருவிகள் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்துடன் ரெம் நிலையை அவர் அடைந்ததும், அவரது காதில் பொருத்தப்பட்டிருந்த ஹெட் போனுக்கு கம்ப்யூட்டரிலிருந்து 'ஜிலாக்' எனும் வார்த்தை 'ரெமியோ' மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.
ரெமியோ என்பது சிறப்பு கணினி மொழியாகும் என்பதுடன் இந்த வார்த்தையை முதல் நபர் தனது கனவில் உச்சரித்திருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து 8 நிமிடங்கள் கழித்து இரண்டாவதாக பெண் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று ரெம் நிலையை எட்டியுள்ளார்.
அதன்போது, முதல் நபர் கேட்ட, 'ஜிலாக்' எனும் வார்த்தையை அவரும் கேட்டிருக்கிறார். எனினும் கணினியிலிருந்து அவருக்கு எந்த வார்த்தையும் அனுப்பப்படவில்லை.
கனவு வழியாக தகவல் பரிமாற்றம்
எனவே உறக்கத்தின்போது கனவு வழியாக தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளனர்.
அத்துடன், இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர் கனவில் தகவல் பரிமாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தது வந்த போதிலும் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
கனவில் தகவல் பரிமாற்றம் குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், "இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெற்றது. சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது.
கனவை ஆய்வு செய்வதன் மூலம் ஒருவரின் உளவியலை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
மனம் சார்ந்த சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
ஆகவே இந்த ஆய்வு, மனிதகுல வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துகிறது” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |