இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடரும் பதற்றம்
இந்திய விமானங்களுக்கு கடந்த 48 மணி நேரத்தில் விடுக்கப்பட்ட தொடர் வெடிகுண்டு மிரட்டல்களினால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பல விமானங்கள் தாமதமாக அல்லது திருப்பி விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, ஏர் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஸா ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் அவை போலியான அழைப்புகளாக மாறியுள்ளமை தெரியவந்துள்ளது.
12 வெடிகுண்டு அச்சுறுத்தல் சம்பவங்கள்
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் விமான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் 12 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று(16) பெங்களூரு நோக்கி பயணித்த ஆகாசா ஏர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, டெல்லி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விமானம் தலைநகர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பின்னர், மேற்கொண்ட விசாரணையில் அந்த மிரட்டலும் போலியானது என தெரியவந்துள்ளது.
எக்ஸ் தள மிரட்டல்கள்
நேற்று (15) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானத்தை மக்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு அப்பால் அழைத்துச் செல்ல சிங்கப்பூர் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வந்த மிரட்டலை அடுத்து, கடந்த திங்கட்கிழமை(14) மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள் தாமதமாகியதுடன் திருப்பிவிடப்பட்டன.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எக்ஸ் தளத்தில் இடப்பட்ட குறித்த பதிவில் வந்த மற்றொரு மிரட்டலால் நேற்று(15) ஓர் ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட ஏழு விமானங்கள் நிறுத்தப்பட்டதுடன் தற்போது அந்த எக்ஸ் சமூக வலைதளக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ நடவடிக்கை
அந்தப் பதிவில், பதிவிட்டவர் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தை டேக் (Tag) செய்து விமானத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளார் என தெரியவருகிறது.
அதன்படி, இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காணவும், இதனால் ஏற்பட்ட சேதங்களை மீட்க அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருவதாக ஏர் இந்தியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |