இலங்கையில் கறுப்பு பட்டியலில் இணைக்கப்படவுள்ள நிறுவனங்கள்
கறுப்புப் பட்டியலில்
கால்நடைத் தீவனத்திற்கான தானியங்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட அளவை இலங்கைக்கு கொண்டுவரத் தவறினால், அந்த நிறுவனங்கள் அனைத்தையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் சோளத்தில் 27% மாத்திரமே இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடை தீவனம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை தீவன பொருட்களை இறக்குமதி செய்பவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு
2022 ஆம் ஆண்டிற்கான கால்நடை தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 2,25,000 மெட்ரிக் தொன் தானியங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது, ஆனால் இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது 62,762 மட்டுமே என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிலை உணவுப் பொருட்களின் விலை உயர்வையும் மறைமுகமாக முட்டை விலை உயர்வையும் பாதித்துள்ளதால், இது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் ஒக்டோபர் 07ஆம் திகதிக்கு முன்னர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு டிசம்பர் 31 க்கு முன்னான ஒதுக்கீடு தொடர்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
