லொட்டரியில் அதிஷ்டம் அடித்தும் பணம் வழங்க மறுக்கும் நிறுவனம் : நீதிமன்ற படியேறிய அதிஷ்டசாலி
லொட்டரியில் பெருந்தொகை பணம் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை பெறச் சென்ற அதிஷ்டசாலிக்கு குறித்த லொட்டரி நிறுவனம் பணம் வழங்க மறுத்ததனால் நீதிமன்ற படியேறி உள்ளார் அவர்.
அமெரிக்காவின் வோஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் என்ற அதிஷ்டசாலிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
லொட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர்
கடந்த ஜனவரி 6-ம் திகதி பவர் போல் லொட்டரி சீட்டை குறித்த நபர் வாங்கியுள்ளார்.. அவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 105,916,766,000) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
லொட்டரி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு சென்று அந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ். இதையடுத்து லொட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லொட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார்.
லொட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள்
ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு லொட்டரி விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் லொட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.
இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த லொட்டரி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது குறித்து அவரது சட்டத்தரணி கூறுகையில், “லொட்டரி நிறுவனத்தின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜான் சீக்ஸுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |