விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி
நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளைப் பரிசோதித்து நட்டஈடு வழங்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது.
அத்துடன் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,239 விவசாயிகளுக்காக 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்குக் கிடைக்கப் பெற்ற பரிந்துரை பாதிப்பு விண்ணப்பங்களுக்கு அமைவான நிதி அவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கை பாதிப்பு
இதற்காக 3,272 விவசாயிகளுக்காக 70 மில்லியன் ரூபா அவர்களது கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளுக்கமைய 8,705 விவசாயிகளுக்காக 122 மில்லியன் ரூபா நேற்றைய தினம் (10) விவசாயிகளின் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது தவிர, நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நெல், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈட்டை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)