வேலன் சுவாமிகள் கைது - சைவர்களை அவமதித்ததாகவே அமையும் - இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை!
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டில் இம்மாதம் 18ம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், தவத்திரு வேலன் சுவாமிகளின் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம் என இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் தலைமை செயலகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்து சமயத் தொண்டர் சபையின் கண்டன அறிக்கை
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்த வேளை, அறத்தின் வழி அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் சைவசமயத் துறவியும் சிவகுரு ஆதீன குரு முதல்வருமான வணக்கத்துக்குரிய தவத்திரு வேலன் சுவாமிகளை காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கைது செய்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஜனநாய வழியில் அமைதியாக போராட்டம் நடாத்துவது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.
அந்த வகையில், ஒரு சைவத் துறவியான குரு முதல்வரை கைது செய்த விடயம் எமது சைவர்களை அவமதித்ததாகவே அமைவதுடன், அறத்தின் வழி செயற்படும் சைவத்துறவியை கைது செய்தது சைவ மக்கள் மனதில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட தரப்பினர் நிதானத்துடன் செயற்படல் வேண்டும், இல்லாத பட்சத்தில் மேன்மேலும் சைவ மக்களிடையே ஆத்திரத்தை ஊட்டுமே தவிர ஒரு சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வழிகோலாது என இந்து சமயத் தொண்டர் சபை தமது கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

