யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (30) “நீதிக்கான நீள் பயணம்“ மாநாடும் அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய பேரணிக்கும் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக போராடும் உறவுகள்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
அந்தவகையில், எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30) 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும் வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது ஆதரவு தொடரும்.

அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே பேரன்புமிக்க தமிழ் சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல் ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |