தமிழர் தரப்பிலிருந்து அநுரவிற்கு குவியும் வாழ்த்துக்கள்
நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையில்,“தீவளாவிய மக்கள் விரும்பிய முறைமை மாற்றம் (system change ) என்ற அடிப்படையில் அந்த எண்ணக்கருவிற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக புதிய ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள அனுர குமார திசாநாயக்க ஆகிய தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் தங்களிற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வாழ்த்துக்கள்.
உங்கள் பாரபட்சமற்ற சமத்துவ இடதுசாரி சிந்தனைகளை கொண்ட ஊழலை கட்டுப்படுத்தும் அதீத சாராயக்கடை உரிமங்களை இரத்து செய்யும், போதையை ஒழிக்கும் இளைஞரின் வேலைவாய்ப்பை அதிகரித்து புலம்பெயர்வை கட்டுபடுத்தும் வியத்தகு மாற்றமிக்க ஆட்சியை தீவு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
தமிழ் பொது வேட்பாளர்
அதே நேரம் தீவின் தேசிய மக்கள் குழுமமாகிய வடகிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் நீண்டகால எம் அபிலாசைகளை வடகீழ் மாகாணத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகார நீதி வழங்கலுடன் திட்டமிட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்கும் குடியேற்றங்கள் முற்றாக நிறுத்தப்பட்ட சூழலில் தமிழ் மொழி கலாச்சார உரிமைகள் சரிநிகர் சமானமாக வழங்கப்பட தங்கள் ஆட்சி காலத்தில் வழி ஏற்படுத்தி இந்த தீவில் நிரந்திர அமைதியையும் உண்மையான இனங்களுக்கு இடையேயான சமத்துவத்தை கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம்.
இதனை வடகிழக்கில் மிக குறுகிய காலத்தில் குறுகிய வளங்களோடு தமிழ்சிவில் சமூகத்தினால் முன்னெடுக்கபட்ட தமிழ் பொது வேட்பாளர் கருத்திட்டம் ஊடாக தாங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எம் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்கள் கடந்த கால தேர்தல்களில் தாங்கள் பெற்றிருந்த கவனயீர்ப்பை ஒத்த ரீதியிலும் நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குழுமத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் வடகிழக்கு மாகாணத்தில் பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருப்பது இருப்பதையும் பொதுக் கட்டமைப்பாக தமிழ் சிவில் அமைப்புக்களும் கணிசமான தமிழ் தேசிய கட்சிகளும் அணி திரண்டு இருப்பதையும் தாங்கள் முன்னதாகக் கூறியது போல மிக ஆழமான கரிசனைக்கு எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
மறுமலர்ச்சி யுகம்
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவும் இன்னும் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகியும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அனைத்து வடகிழக்கின் காணிகள் விடுவிக்கப்படவும் அதீத இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவும் வழி ஏற்படுத்தி உண்மையான தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி எம் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டை இத்தீவின் மீது ஈர்த்து பொருளாதார சுபிட்சங்களை இலங்கையர்களிற்கு வழங்குவீர்கள் முதற்கண் எதிர்பார்க்கின்றோம்.
போராட்ட பாதையிலே அடித்தள மக்களின் உணர்வுகளோடு புரட்சிகர சித்தாந்தத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கும் தாங்கள் வலிகள் நிறைந்த தியாக வேள்வியை கடந்து வந்திருக்கும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நாம் ஆழமாக நம்புகின்றோம்.
இந்த அழகிய தீவில் இரு மொழி பேசும் மக்களும் ஆனந்தமாக கூட்டுணர்வோடு வாழ இனப் பிரச்சpனைக்கான நிரந்திர தீர்வு எட்டப்பட தாங்கள் முழு முயற்சிகளை முன்னெடுக்கவும் அவை வெற்றி பெறவும் அதனூடாக இலங்கையர் கனவு காணும் மறுமலர்ச்சி யுகம் தங்கள் ஆட்சியில் மலரவும் வாழ்த்தி நிற்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |