இலக்கு வைக்கப்படும் அமெரிக்க வங்கிக் கிளைகள்...! ஈரானின் கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் அமெரிக்க வங்கிக் கிளைகள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படை (IRGC) விடுத்துள்ளது.
அண்மையில் ஈரானிய வங்கிகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, அண்டை நாடுகளிலுள்ள அமெரிக்க வங்கிக் கிளைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் படை
குறித்த விடயத்தை இராணுவப் படைப் பேச்சாளர் நைனி (Naeini) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிரி தனது தவறை மீண்டும் செய்து, ஈரானிய வங்கிகள் மீது தாக்குதல் நடத்தினால் பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க வங்கிக் கிளைகளும் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் ஈரானின் மிகப்பெரிய மற்றும் பழமையான வங்கியான பேங்க் செப்பா (Bank Sepah) உட்பட இரண்டு வங்கிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டதோடு, வங்கிச் சேவைகளும் முடங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன், அமெரிக்காவுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறை சொத்துகளிலிருந்து ஆட்களை வெளியேற்றுமாறு ஈரானின் இராணுவப் படை எச்சரித்துள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் இராணுவம் அல்லாத தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |