மித்தெனிய கஜ்ஜா கொலையில் இஷாரா! விசாரணை பாதையில் புதிய திருப்பம்
அருண விதான கமகே எனப்படும் கஜ்ஜா கொலைக்கும், இஷாரா செவ்வந்திக்கும் தொடர்புகள் உள்ளனவா என்ற கோணத்தில் தற்போது கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் கணேமுல்ல சஞ்சீவ கொலை திட்டம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி மேலும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மித்தெனியவில் இஷாரா
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்வதற்கு முந்தைய நாள் அதாவது பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கெஹெல்பத்தர பத்மேவின் கட்டளையின் படி, தானும், கமாண்டோ சமிந்து என்பவரும் மித்தெனியவுக்கு சென்றதாக இஷாரா கூறியுள்ளார்.
எனினும், உடனடியாக கொழும்புக்கு விரையுமாறு பத்மே தெரிவித்த காரணத்தினால் அவர்கள் அன்றைய தினமே கொழும்புக்கு சென்றதாகவும், அதற்கு அடுத்த நாள் அதாவது பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்பவரை மித்தெனியவில் வைத்து கொலை செய்வதற்காக இஷாரா மற்றும் துப்பாக்கித்தாரியை பத்மே அனுப்பியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
திடீரென திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் அவர்களை கொழும்புக்கு அழைத்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறை அதிகாரி
இதேவேளை, இஷாரா செவ்வந்தி, மித்தெனியவில் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய தினம் (17.10.2025) காவல்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட அன்றைய தினமே இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தி வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரே அவர் யார் என்பது தெரியவந்ததாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு குற்றவியல் பிரிவு எதிர்ப்பார்த்துள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
