பிரித்தானிய அரசியலில் மீண்டும் திருப்பம்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரித்தானியாவில் ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள் மாறினர்.
லிஸ் ட்ரஸை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்தப் பதவியில் தொடர்ந்து வருகிறார்.
ரிஷி சுனக்கின் பின்னடைவு
போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக செய்தகள் வெளியான உள்ளன.
வரும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், வெளியாகி வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடையும் பட்சத்தில் புதிய தலைவரை தேர்வு செய்யும் முனைப்பில் அக்கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், கடந்த சில வாரங்களாகவே, தன்னுடைய ஆதரவை பெருக்க ரிஷி சுனக் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு
கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் மத்தியில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி இரட்டை இலக்கில் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அண்மையில் எடுத்த இரண்டு கருத்து கணிப்புகளில் ரிஷி சுனக்கிற்கு மக்கள் மத்தியில் சற்று ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஆளுங்கட்சியை விட தொழிலாளர் கட்சிக்கு 21 சதவிகித அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், ரிஷி சுனக்கிற்கு கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி பெருகி வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலில் மோசமான தோல்வியை ஆளுங்கட்சி பெறும் பட்சத்தில், தலைவரை பதவியை பெற பலர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக ஆளுங்கட்சி எம்.பிக்கள், மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆளும் அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சர்களில் ஒருவரான கெமி படேனோச், முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டவர்கள் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.