அநுர அரசை கவிழ்க்க பீரிஸ் வீட்டில் சூழ்ச்சி...! மனோ கணேசன் வெளியிட்ட தகவல்
“ எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பு நடத்தினர்.
மேற்படி சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.
எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி
“இது எதிரணி கூட்டணி அல்ல. எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய பொது மேடையை அமைக்கும் முயற்சியாகும். ஜீ.எல்.பீரிஸ் தலைவர் அல்லர். இப்பணியை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாட்டாளர் அவர். விரைவில் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்கவுள்ளோம்.
தேர்தல் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றம்
ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி நடப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். நாம் அவ்வாறு சூழ்ச்சி செய்யவில்லை. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் இருக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தல் நடத்தி மக்கள் ஆணை வழங்கினால் பதவியில் மீண்டும் இருக்கலாம். தேர்தல் மூலம் மாத்திரமே நாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவோம்.”- என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
