மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக 27 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் குறித்த போராட்டம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
அபிவிருத்தி
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும், நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு, அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே மற்றும் சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
உரிய முறை
இடம் பெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட்தந்தையர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னாரில் காற்றாலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் தமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு உரிய முறையில் கிடைக்காது விட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



