வவுனியாவை உலுக்கிய குடும்பஸ்தரின் மரணம்: வெளியான அறிக்கை
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை நேற்றையதினம் (14.07.2025) வெளியாகியுள்ளது.
மாரடைப்பு
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.
இதன்போது, அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து காவல்துறையினரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற காவல்துறையினர், மீது அப்பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஐந்து காவல்துறையினர் காயமடைந்ததுடன், காவல்துறையினர் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
புதிய காயங்கள்
இந்தநிலையில், அப்பகுதியில் மரணித்தவரின் உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்ன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மரணித்தவரின் உடலில் புதிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் வலது காலில் பழைய வடுக்கள் காணப்படுகின்றது எனவும் இதயத்தின் முன் புறப்பகுதியில் கடுமையான இரத்த உறைவு உருவாக்கம் காணப்படுகின்றது எனவும் இதயத்தின் தசைப்பகுதி மற்றும் இரத்த மாதிரி கொழும்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

