கோட்டாபய விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு
அதிபராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலப் பகுதியில் ஆர்ப்பாட்டகாரர்களால் மீட்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் மீள வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இந்தத் தொகை தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், எனவே அதனை மீள வழங்க முடியாது எனவும் கோட்டை நீதவான் திலின கமகே கட்டளையாக்கியுள்ளார்.
கோட்டாபய விடுத்த கோரிக்கை
இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின் போது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை தனது கட்சிக்காரரிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் அதிபரின் சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பணத்தை மீளக் கையளிப்பதற்கான உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் பணத்தொகை தொடர்பான விசாரணையை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், வேறு யாரும் உரிமை கோராததாலும், அதனை விடுவிக்க முடியாது என நீதவான் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க எதிர்ப்பு போராட்டம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது அதிபர் மாளிகையில் இருந்து ஏறத்தாழ 17.5 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், பணம் எண்ணப்பட்டு, போராட்டக்காரர்களால் கோட்டை காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த பணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
