தோல்வியடைந்த பொறிமுறைகளை மீள தூசி தட்டும் அநுர அரசாங்கம் : சபா குகதாஸ் விசனம்
கடந்த கால அரசின் பொறிமுறைகளையே தற்புபோதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசும் கையில் எடுப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 58 கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத், உள்ளகப் பொறிமுறை மூலம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்தகால ஆட்சியாளர்களினால் காலத்தை கடத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை பலவீனப்படுத்துவதற்கு உண்மைக்கான நல்லிணக்க ஆணைக்குழுக்களை நிறுவியது.
தொடர்ச்சியான நிகழ்ச்சி
இது போன்ற, தோற்றுப் போன பொறிமுறைகளை அநுர அரசும் கையில் எடுப்பதாக கூறுகின்றமை கடந்தகால ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.
மனிதவுரிமைப் பேரவையால் வழங்கப்பட்ட உள்ளகப் பொறிமுறை , கலப்புப் பொறிமுறை மற்றும் கால நீடிப்பு போன்றவற்றுக்கு என்ன நடந்தது உலகிற்கே தெரியும்.
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பர்ணகம மற்றும் உடலகம ஆணைக்குழுக்களுக்கும் தோல்வியடைந்ததை எல்லோரும் அறிவர்.
நீதிப் பொறிமுறை
எதிரணியில் இருக்கும் போது தேசிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்தது இல்லை ஆகவே பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறைகளால் இன நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் ஏற்பட வாய்ப்பில்லை.
அநுர அரசாங்கத்திற்கு மடியில் கனம் இல்லையென்றால் 15 ஆண்டுகளாக தோல்வியடைந்த பொறிமுறைகளை சிந்திக்காது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கும் கடந்த மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளுக்கும் ஏற்ப சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதன் மூலமே உண்மையை கண்டறிவதுடன் நல்லிணக்கத்தையும் மீள் நிகழாமையையும் ஏற்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
