இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!
நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை இன்றைய தினம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
அத்துடன், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடுகளை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
வறட்சியினால் நெல், சோளம் உள்ளிட்ட ஏனைய பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளமை குறித்து விவசாயிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக, அதிகாரிகள் நேரில் சென்று சேதங்களை மதிப்பீடு செய்த பின்னரே இந் நிதி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பயிர் இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சேதமடைந்த நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சொயா மற்றும் மிளகாய் ஆகிய 06 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும் என அச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |