வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்!
இலங்கை சுங்கம் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாண்டு நவம்பர் மாதமாகும் போது அந்த இலக்கை விஞ்சிய வருமானத்தைத் திரட்ட முடிந்ததாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வருமான இலக்கு
அதற்கமைய, நவம்பர் மாதத்தில் இந்த வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாயிலிருந்து 2,231 பில்லியன் ரூபாய் வரை திருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்தத் திருத்தப்பட்ட இலக்கும் தற்போது கடந்து சென்றுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக சந்தன புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "இவ்வாண்டிற்கான வருமான இலக்கை நிர்ணயிக்கும் போது, கடந்த ஆண்டின் வருமான இலக்கான 1,531 பில்லியன் ரூபாயிலிருந்து, இந்த ஆண்டு வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாயாக பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தீர்மானத்தையும் கருத்தில் கொண்டே அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த வருமான இலக்கை விஞ்சிச் செல்வதற்கு வாகன இறக்குமதி ஒரு காரணமாக அமைந்ததுடன், சுங்கத் திணைக்களத்திற்குள் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |