கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சயனைட் நாவல் அறிமுக நிகழ்வு
ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன் (Deepachelvan) எழுதிய “சயனைட்” நாவலின் அறிமுக விழா கனடாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (27) மாலை நான்கு மணிக்கு கனடாவின் (Canada) மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதி, நடுகல் போன்ற நாவல்கள் மூலம் உலகத் தமிழர்களின் மனதையும், சிங்கள இலக்கியவாதிகளின் கவனத்தையும் ஈர்த்த எழுத்தாளர் தீபச்செல்வன்.
விடுதலைக்கான நம்பிக்கை
இந்தநிலையில், அவர் தனது மூன்றாவது நாவலாக “சயனைட்” நாவலை எழுதியுள்ளார்.
“சயனைட்” என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் மதிப்பு மிக்க குறியீடாக, குறியீட்டுப் பொருளாக உலகத் மக்களால் பார்க்கப்பட்டது.
போராளிகள் எதிரியிடம் உயிருடன் அகப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்து வந்தனர்.
இது ஈழப்போராளிகளின் தியாகத்தையும் மற்றும் விடுதலைக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்திய மாபெரும் அடையாளமாகும்.
உணர்வுப்பூர்வமான படைப்பு
நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “சயனைட்” நாவல், வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுபதிப்பையும் கண்டுவிட்டு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நாவல், சயனைட் அருந்தி வீர மரணம் ஏற்ற தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு சமர்ப்பணமாகும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விரிவுரையாளர் பொன்னையா விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி, திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப், எழுத்தாளர் காலம் செல்வம் அருளானந்தம், அன்பரசி மற்றும் பிரியா வின்சட் ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர்.
முதல் பிரதியினை தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் திலீப்குமார் பெற்றிருந்தார்.
அத்துடன் விழாவில் கவிஞர்கள், மூத்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்துறை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







