அதிபர் தேர்தலில் களமிறங்கத் தயார் : தயாசிறி அதிரடி அறிவிப்பு
கோரிக்கை விடுக்கப்பட்டால் அதிபர் வேட்பாளராக களமிறங்கத் தயார் என சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எல்லோருடனும் சுமுகமான உறவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
“எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக களமிறங்குவேன், நான் தேர்தலில் வெற்றி பெறுவேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
புதிய அரசியல் கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இந்த வாரம் (மார்ச் 20) புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என அடையாளம் காணப்பட்ட புதிய அரசியல் பிரிவு சுமார் 20 அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களைக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |