உயிரிழக்கும் மீன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!
கொத்மலை ஓயாவில் திடீரென மீன்கள் இறப்பதாகவும் அந்த மீன்களை உட்கொள்ள வேண்டாம் என நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிமனை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மீன்கள் உயிரிழப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்து காரணத்தை கண்டறியும் வரை கொத்மலை ஓயாவின் நீரை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஸ்ஸங்க விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
உயிரிழக்கும் மீன்கள்
கொத்மலை ஓயாவின் அம்பேவல முதல் மெராயா, எல்ஜின், அக்கரகந்தை வரையான 12 கிலோமீற்றர் நீர் பரப்பளவுக்குள் மீன்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பணிகளுக்காக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை, கொத்மலை ஓயாவின் நீர் மாதிரிகள் மற்றும் அதில் இறந்த மீன்களுள் சில பரிசோதனைக்காக பேராதனை கன்னோருவையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை கால்நடை வைத்தியர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.