மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் - மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை
கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த 07 ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பை தளமாகக் கொண்டு இயங்கும் மட்டு ஊடக அமையத்தில் 7 ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போவதாக துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்த நிலையில், இன்று இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் ஒட்டுக் குழுக்களின் முகநூல்களில் இருந்து சில கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முகநூல் கருத்துக்களின் அடிப்படையில் பிள்ளையான் சிறையில் இருக்கும்போதே, மட்டக்களப்பில் உண்மைகளை உரக்கச் சொன்ன ஊடகவியலாளர்கள் குறி வைக்கப்பட்டார்களா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட விடயம் பல கோணத்திலும் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று பிள்ளையானின் ஆதரவாளர்களின் முகநூல் ஊடாக உண்மைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.
ஆகவே குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக மட்டக்களப்பு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அதனூடாக உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கடந்த கால கசப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்வதற்கு முடியாத நிலை மட்டக்களப்பில் வீசப்பட்ட துண்டுப் பிரசுரத்தால் ஏற்பட்டிருந்தது.
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக “மரண தண்டனை விதிப்போம்” என விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பல ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தது.
மட்டக்களப்பிலிருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை வெளி உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்ற செய்தியாளர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான, கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள துண்டுப்பிரசுர அச்சுறுத்தலானது மிகவும் தவறானதொரு விடயமாகும்.
அநாமதேயமாக துண்டுப்பிரசுரங்களை வீசி ஊடகவியலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கும் நசுக்குவதற்குமான முயற்சியாகவே மட்டு ஊடக அமையத்திற்கெதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பார்க்கப்படுகின்றது.
பல்வேறு சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பிரதேசங்களில் நடைபெறுகின்ற விடயங்களை வெளிப்படுத்திவரும் வேளையில் அச்சுறுத்தல் செயற்பாடுகள் கவலையளிக்கின்ற ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர்.

