செம்மணி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி : வெளியான தகவல்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கான் இயந்திரத்தின் மூலம் ஓகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெறவுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட போதிலும், புதிய அனுமதி தேவையில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் (Ministry of Defence) அனுமதி இல்லாமல் ஸ்கான் செய்யலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (30) இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூன்றாவது பெரிய மனித புதைகுழி
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கில், செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த புதைகுழி, நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ளது.
தடயவியல் தளம் 1ல், ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்டபடி காணப்பட்ட நிலையில் அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள்
மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும்” என தெரிவித்தார்.
இந்த அகழ்வுப் பணிகளை, தொல்பொருள் மற்றும் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, யாழ் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் இணைந்து வழிகாட்டி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
