தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு
தெஹிவளை (Dehiwala) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று (20) காலை 6.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதன்போது வலது தோள்பட்டைக்கு அருகில் 02 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நகர சபை ஊழியர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பிரதிபலனாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இதைவிட கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நேற்று முன்தினம் (18) இரவும் இரண்டு சம்பவங்கள் நேற்றும் (19) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |