அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபைத் தலைவரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் (Bimal Rathnayake) நடத்தை குறித்து விசாரணை நடத்தக் கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நிலையியற் கட்டளையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கடந்த 20 ஆம் திகதி சபாநாயகரின் அனுமதியுடன் செயல்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்ய அரியரத்ன, சபாநாயகர் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், நிலையியற் கட்டளையை எதிர்த்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், இது சபாநாயகரின் விருப்புரிமையை தெளிவாக கேள்விக்குள்ளாக்கியதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தயாசிறி மீதான குற்றச்சாட்டு
அதனை தொடர்ந்து, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கை, நிலையியற் கட்டளை 91 (h) ஐ மீறுவதாக சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பிமலின் ஜனாதிபதி நிதியை மோசடி செய்து ஏழை மற்றும் அப்பாவி மக்களின் பணத்தைத் திருடிய நபர் என்ற அறிக்கையின் மூலம் தயாசிறி ஜெயசேகரவின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும், அதிலிருந்து சில பகுதிகள் பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10வது நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து தற்போதைய சபைத் தலைவரின் செயல்களும் நடத்தையும், முன்னோடி சபைத் தலைவர்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதாகவும், எனவே, 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்றும் அந்தக் கடிதம் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
