இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், அதிகளவானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆயிரத்து 497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த மாதம் ஆயிரத்து 150 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதத்தில் கொழும்பில் ஆயிரத்து 83 பேரும் கம்பஹாவில் ஆயிரத்து 77 பேரும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இந்த மாதத்தின் 9 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 218 பேரும் புத்தளத்தில் 172 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், மேல் மாகாணத்தில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு 66 ஆயிரத்து 575 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.