குருந்தூர் மலையில் தொடரும் அட்டூழியம்: அபகரிக்கப்படும் வயல் நிலங்கள்
குருந்தூர் மலை பகுதியில் சுற்றியுள்ள வயல் நிலங்களானது தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் முன்வைத்துள்ளார்.
தமிழ் மக்களின் பூர்வீக இடமாக காணப்படுகின்ற குமுழமுனை தண்ணி முறிப்பு குருந்தூர் மலை பகுதியில் இருந்த ஆதி சிவன் ஐயனார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டதன் பின்னணியில் அதனை சூழ உள்ள வயல் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறிப்பாக நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறியும் குருந்தூர் மலைப்பகுதியிலே விகாரை அமைக்கும் பணிகள் முற்றும் முழுதாக நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தடைகளை மீறியும் தமிழ் மக்களினுடைய பூர்வீக வயல் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்கின்ற தொல்பொருள் திணைக்களத்தினுடைய செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இதனடிப்படையில், தமிழ் மக்களினுடைய பூர்வீக வயல் நிலங்களில் நேற்று முன்தினம் (14) தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக பெயர்பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (16) குறித்த இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் குறித்த வட்டாரத்தினுடைய உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குருந்தூர் மலை பகுதி மற்றும் மக்களின் வயல் நிலங்களில் புதிதாக பெயர் பலகை நடப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டுள்ளனர்.
இதையடுத்து, கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் பூர்வீகமாக வயல் செய்து வந்த நிலங்களை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மாறி மாறி வந்த ஆட்சியாளர்களைப் போன்று தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களினுடைய நிலங்களை அபகரிக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் இதற்கு எதிராக மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த பகுதியில் வனவள திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களை அங்கு மீள்குடியேற விடாத அளவிலே தடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த இடத்தில் வசித்து வந்த மக்களை உடனடியாக அந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
