நாட்டில் உருவாகும் பல்வகைப் போக்குவரத்து நகரம் - 377 மில்லியன் ரூபா செலவில் நிர்மானம்!
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகின்ற கடவத்தை நகரம் பல்வகைப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம் விரைவில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
377 மில்லியன்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகையில், “இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் கடவத்தை நகரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு சந்திக்கின்றன. எனவே, நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேறுபட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் வசதி உள்ளது.
இந்த பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 377 மில்லியன் ரூபாவாகும். இங்கு 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2021ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 பேருந்துகள் நிறுத்தக்கூடிய பேருந்து முனையம் இங்கு கட்டப்பட்டுள்ளது. இது தவிர இங்கு அலுவலக வாகனங்கள் நிறுத்தும் இடமும், நவீன உணவு விடுதியும் கட்டப்பட்டுள்ளன.
கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம்

இங்கு சுரங்கப்பாதையும் உள்ளது. சுரங்கப்பாதையின் இருபுறமும் 18 விற்பனை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக இந்த பல்வகை போக்குவரத்து நிலையம் திறக்கப்படுவது ஓராண்டுக்கு மேல் தாமதமாகியது.
நவீன வசதிகளுடன் கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் உரிமையாளர்கள் தற்போது மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
எனவே, இந்த பல்வகை போக்குவரத்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சமீபத்தில் அறிவுருத்தியுள்ளேன்.”என தெரிவித்தார்.