ஜனாதிபதி அனுரவின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..!
திருகோணமலை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட சண்டி பே (sandy bay) கடற்ககரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக ஜனாதிபதி அனுர ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு குறித்த கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக அப் பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை மனையாவெளி கடற்றொழில் சங்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
காணிகள் சிறிலங்கா கடற்படை வசம்
கடந்த 1990ம் ஆண்டு முதல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது தாம் இடம் பெயர்ந்ததாகவும் பின்னர் அங்கு மீளவும் குடியேறிய நிலையில் இற்றைவரை அங்கு தாம் தொழில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்து மீளவும் குடியேறியபோது தமது காணிகள் சிறிலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் கடற்கரையில் வேலி ஒன்றும் அமைக்கப்பட்டு இற்றைவரை அப்பகுதியினுற் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரம் வழங்கலில் புறக்கணிப்பு
குறித்த கடற்கரையில் படகுகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதனால் அங்குவரும் சுற்றுலாப்பயணிகள் தமக்கு போதிய இட வசதி கிடைப்பதில்லை என தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் அதிகமாக கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை படகு சேவையில் ஈடுபடுவோருக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்போது தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 103 அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகப்படியான அனுமதிப்பத்திரங்கள் வெளிமாவட்டத்தவருக்கு வழங்கப்படுவதாகவும் அதில் ஒரு வீதமான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே தமது பகுதிக்கு வழங்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமதுகோரிக்கைகளுக்கான முடிவினை விரைவில் பெற்றுத்தரவேண்டும் என இதன்போது தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |