ட்ரம்பின் வரியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு: உலக வங்கி எச்சரிக்கை!
அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொண்டு வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஏற்றுமதி தேவை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய வரிகளில் மேலும் அதிகரிப்பு, வர்த்தக கட்டுப்பாடுகளை இறுக்குதல் மற்றும் உலகளாவிய வர்த்தகத் துறையில் தற்போதைய நிச்சயமற்ற தன்மை ஆகியவை தெற்காசிய பிராந்தியத்தில் இந்த பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கி தனது 'ஜனவரி 2026 உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்' அறிக்கையில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக வங்கி
அமெரிக்க நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 'பரஸ்பர வரி விதிப்பு' மீது அவதானம் செலுத்தி, தெற்காசிய பிராந்தியத்தின் உலகளாவிய வர்த்தகத்திற்கான திறந்த தன்மை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு அபாயங்கள் அதிகம் என்பதை குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அமெரிக்கா 10 வீத அடிப்படை கட்டண விகிதத்துடன் மேலதிகமாக இலங்கைக்கு எதிராக 20 வீத பரஸ்பர கட்டண விகிதத்தை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
ஆரம்பத்தில், இது 44 வீதம் வரை அதிகமாக இருந்தது எனினும், பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையால் அதனை 20 வீதமாகக் குறைக்க முடிந்தது.
[DGAKBIV ]
இறப்பர் துறை
தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழலில் நாட்டின் பாரம்பரிய ஏற்றுமதி இறப்பர் துறை கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தார்.

வழக்கமாக ஆண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் இறப்பர் ஏற்றுமதி வருவாய் 2025 ஆம் ஆண்டுக்குள் 950 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிச்சயமற்ற சூழல் இருந்தபோதிலும், அமெரிக்க சந்தைக்கு இலங்கையின் ஆடை ஏற்றுமதி நவம்பரில் 5.79 வீதம் வளர்ச்சியைக் காட்டியது.
இருப்பினும், நாடு ஆடைகளுக்கு 36.8 வீதம் மற்றும் இறப்பர் பொருட்களுக்கு 20.2 வீதம் என்ற உயர் கட்டண விகிதங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |