'டிஜி இகோன்' - டிஜிட்டல் மயமாகும் இலங்கை
இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறை
இங்கு மேலும் கருத்து தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், “தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
இதன் பிரதான வேலைத்திட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை (SL-UDI) வழங்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்காக இலங்கை – இந்திய ஒருங்கணைந்த வேலைத்திட்ட மேற்பார்வைக்குழு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவையான தகவல் தொழிநுட்பக் கட்டமைப்பை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்கும், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தலின்போது இந்த டிஜிட்டல் அடையாள அட்டை(SL-UDI) மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணியாக மென்பொருள் மேம்பாட்டுச் செயற்பாட்டிற்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையின் உயர் கல்வியில் அதிகளவான பட்டதாரிகள் கலைத்துறையிலேயே தமது பட்டங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். தகவல் தொழிநுட்ப துறையில் பிரவேசிக்க அவர்கள் விரும்பும்பட்சத்தில் கலைத்துறைப் பட்டத்திற்கு மேலதிகமாக 06 மாதகால பாடநெறியை தொடர்வதற்கான பணிகளை கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
டிஜி இகோன் வேலைத் திட்டம்
நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் அல்லது டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகளை அதிபரின் ஆலோசனையின் கீழ் ஆரம்பித்துள்ளோம்.
இந்த டிஜி இகோன் (Digi - Econ) என்ற வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் அதிபரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையை துரித டிஜிட்டல் மயமாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
டிஜிட்டல் பொருளாதாரம் 2020 – 2030 என்ற (Digi - Econ 2020-2030) வேலைத்திட்டத்தை ஏற்கனவே உலக வங்கியின் தொழில்நுட்ப ஆதரவுடன் ஆரம்பித்துள்ளோம். ஒக்டோபர் மாதத்தில் அதிபரின் தலைமையில் அதனை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
ஒக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை டிஜி இகோன் வேலைத் திட்டத்தை பல கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளோம்.
உலகின் தொழில்துறை எவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இலங்கையில் எவ்வாறு உள்வாங்குவது உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அத்துடன், தொழில்சார் தொழில்நுட்பவியலாளர்களுக்கு டிஜிட்டல் வீசா ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதேபோல் இணையவழி கொடுப்பனவு முறைகளையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
அடுத்த வருட முற்பகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு பல வேலைத் திட்டங்களை மையப்படுத்தியே டிஜி இகோன் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.