தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி
எமது நாட்டின் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் நாங்கள் மனதார விரும்பவில்லை ஆனால் மதிப்பளிக்கின்றோம் என தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரது கன்னி உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம், ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம்.
சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு பொதுநலவாதி, தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன, மத, குல வேறுபாடு எனக்கில்லை.
இறந்த உறவுகளை வணங்குதல்
ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமனாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள். அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனால் மதிப்பளிக்கின்றோம்.
இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.
நான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது. நான் சொல்ல விழையும் விடயத்தை நீங்கள் அனைவரும் புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வோர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவ முகாம் உள்ளது, இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி
அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
மகாவலி - எல் வலயத்தில் மூவினமக்களுக்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள். ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
முதலாவதாக இந்த நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு இரண்டாவதாக பொருளாதார பிரச்சனைக்கான தீர்வு. முதலாவது பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இரண்டாவதுக்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது.
ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும் இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.
பொருளாதாரக் கொள்கை
நாட்டில் இடம்பெற்ற யுத்தம், நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மை, ஆட்சியாளர்களினதும் சகபாடிகளினதும் ஊழல், துஸ்பிரயோகம், வீண்விரயம் என்பவையே பொருளாதார பிரச்சினை ஏற்பட காரணமாகும்.
யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த தேசிய வருமானத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எவ்வளவு?
இன்று எமது மக்களின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ளது. 15,000 இற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள், 75,000 விசேட தேவைகள் உள்ள மக்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் என சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்து நிற்க முடியாதவர்கள்.
எனவே வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது, அதற்கான முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள் உள்ளோம்.
தொடர்ந்தும் நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்காதீர்கள். அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் வெற்றியடைந்த திட்டங்கள் எத்தனை?
வெள்ள அனர்த்தம்
தமது சொந்த உழைப்பில் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப பொருளாதார திட்டங்களை தீட்டுங்கள். பாழடைந்த குளங்களை புனருத்தாரணம் செய்து விவசாயக் காணியற்ற குடும்பங்களிற்கு குறைந்தது 2 ஏக்கர் வயல் காணிகளை வழங்குங்கள். இவ்வாறான திட்டங்கள் வெற்றியடைய நாமும் உங்களுடன் சேர்ந்து உழைக்க ஆயத்தமாக உள்ளோம்.
சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச்செல்லப்பட்டு ரஸ்ய இராணுவத்தில் சிலர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும் அனுமதியற்ற கட்டிட நிர்மானங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும். பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இறுதியாக நாங்கள் இந்த நாட்டின் பூர்வ குடியாக, ஒரு தேசிய இனமாக எங்களின் அடையாளங்களை பேணிக்கொண்டு ஒரு பன்முகத்தன்மை உள்ள வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |