புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு விடுதலைப் புலிகளின் தலைவரை தமது தேசிய தலைவர் என்று தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிப்பதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), விடுதலைப்புலிகள் அமைப்பினை தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்வது தெளிவாக விளங்குகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட 300 கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அலட்சியப்படுத்தும் அரசாங்கம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, ''நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது. அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இது இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும்.
300 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காணி விடுவிப்பு
இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது.

அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும். நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரியால் வெட்டி வீழ்த்தும் நிலையை அரசாங்கம் உருவாக்க கூடாது.
அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தடையாக அமையலாம்.
விடுதலைப்புலிகள் அமைப்பினை இவர் தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்வது தெளிவாக விளங்குகிறது" என தெரிவித்தார்.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        