இந்தியாவில் கொரோனா தொற்றால் 864 மருத்துவர்கள் உயிரிழந்த சோகம்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து தற்போது வரை நான்கு கர்ப்பிணி மருத்துவர்கள் உட்பட 864 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ கழகத்தின் இணையத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் இந்த ஆண்டு மட்டும் 126 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகளவு நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 86 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையில் இந்த ஆண்டு உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் மாவட்ட ரீதியாக சேகரிக்கப்பட்டுவருவதாக இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
